‘அடுத்தது என்ன?’ – தேர்தல் முடிந்து விட்டது! வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டாயிற்று! குழப்பம் தீரவில்லையே!
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பும் நீடிக்கும் குழப்பங்கள்.
அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவதுண்டு. அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகள், டொனால்டு டிரம்ப் அவர்கள் அதிபராக இருந்தார். இவரது பதவி காலம் நிறைவு பெற்ற நிலையில், கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அவர்களும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அவர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நிலவிய நிலையில், வெற்றியாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில், ட்ரம்ப், வாக்கு நடந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
பைடனின் வெற்றியும், வாழ்த்தும்
பல விதமான சிக்கல்கள் மற்றும் தாமதங்களுக்கு மத்தியில், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றிக்கு பிற நாட்டு அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப்
தேர்தல் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கையும் நிறைவுற்று, வெற்றியாளரும் அறிவிக்கப்பட்ட பின்பும், டொனால்டு ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமல் போராடி வருகிறார். நீதிமன்றத்தை நாடுவதும், மறுவாக்கு எண்ணிக்கைக்கு கோருவதும் ட்ரம்பின் திட்டமாக இருந்து வருகிறது.
அமெரிக்க அரசியல் சட்டம்
அமெரிக்க அரசியல் சட்டப்படி, இந்த அதிபர் தேர்தல் சம்பந்தமாக என் சிக்கல் ஏற்பட்டாலும், டிச.8ம் தேதிக்குள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படியில்லையெனில், சிக்கல் ஏற்படும் மாநிலங்களின் சட்டப்பேரவையில் களத்தில் இறங்கி தேர்தல்சபை உறுப்பினர்களின் பட்டியலை வழங்கும்.
ட்ரம்பின் டார்கெட்
டொனால்டு ட்ரம்பை பொறுத்தவரையில், பென்சில்வேனியா, மிச்சிகன், அரிசோனா போன்ற மாநிலங்களில், குடியரசு கட்சியினரே அதிகம். இதனை குறிவைத்து இந்த வழியில் பைடனுக்கு முட்டுக்கட்டை என ட்ரம்ப் தரப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால், இவற்றில் இரு மாநிலங்களில் ஜனநாயக கட்சியின் ஆளுநர்கள் தான் பதவியில் இருக்கிறார்கள்.
அவர்கள், அவர்களது விருப்பப்படி தனியாக பட்டியல் ஒன்றை வெளியிடுவார்கள். இப்படி நடந்தால், 2000-ம் ஆண்டு நடைபெற தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தை விட மிகப் பெரிய அளவிலான குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த குழப்பத்தின் முடிவிலும் இவருக்கு வெற்றி கிடைப்பது சந்தேகம் தான். அமெரிக்க நீதிமன்றங்களும் இவருக்கு ஆதரவாக இருக்க போவதில்லை என கணிப்புகள் தெரிவிக்கின்றன.