மிகவும் பரிதாபகரமான நிலையில் இருமுறை சாம்பியன் அணி!தகுதிச்சுற்றில் ஆடும் அணியால் வேதனை …..
2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மேற்குஇந்திய தீவுகள் அணி வரும் ஞாயிறன்று ஹராரேயில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறங்குவது மேற்குஇந்திய தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது.
தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மேற்குஇந்திய தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் உள்ளிட்ட ஐபிஎல் வீரர்களின் நிலை மேற்குஇந்திய.தீவுகளின் ஒட்டுமொத்த கிரிக்கெட் நிலையை விளக்க ஒரு எளிய சுயதேற்றமாகும் (self evident)
ராய் பிரெடெரிக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், விவ் ரிச்சர்ட்ஸ், ஆல்வின் காளிச்சரன், லேரி கோம்ஸ், கிளைவ் லாய்ட், டெரிக் முர்ரே, ஜெஃப் டியூஜான், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஜொயெல் கார்னர், பெர்னர்ட் ஜூலியன், லான்ஸ் கிப்ஸ், ரிச்சி ரிச்சர்ட்சன், பிரையன் லாரா, வால்ஷ், ஆம்புரோஸ் இன்னபிற நட்சத்திரங்களை தங்கள் நினைவுகளில் தாங்கி இன்றைய மேற்குஇந்திய.தீவுகளின் நிலையை ஒப்பிட்டு ரசிகர்கள் வேதனையடைவது தவிர்க்க முடியாததே.
மேற்குஇந்திய தீவுகளின் வீழ்ச்சிக்கு உள்/வெளிக் காரணங்கள் ஏராளம், சிறார்கள் அமெரிக்காவின் என்.பி.ஏ கூடைப்பந்து அளிக்கும் வாய்ப்புகளுக்கும் பணத்துக்காகவும் செல்லத் தொடங்கினர், கால்பந்தும் பெரிதும் பிரபலமடைந்துள்ளது, மேற்குஇந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் மன்னிக்க முடியாத குளறுபடிப் போக்குகள் என்று எக்கச்சக்கக் காரணங்கள் இன்று மே.இ.தீவுகள் அணியை ‘மனதின் கிரிக்கெட் அணி’யாக (Cricket team of mind) மாற்றியுள்ளது.
தகுதிச் சுற்றில் புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து, தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தும் ஜிம்பாபவே, ஸ்காட்லாந்து, பப்புவா நியுகினியா, ஹாங்காங், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாள் ஆகிய அணிகளுடன் மோதிப் புறப்பட வேண்டும் மேற்குஇந்திய தீவுகள். 3 வாரங்கள் நடைபெறும் இந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் வரும் அணிகள்தான் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும்.
இதில் ஆப்கான் அணி வலுவாகத் திகழ்கிறது ஏற்கெனவே உலகப்புகழ் பெற்றுவிட்ட ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான், சகா ரிஸ்ட் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் (16 வயது) ஆகியோருடன் ஆப்கான் அணி ஏற்கெனவே இதில் டாப் இடத்தை பிடித்து விடும் என்று கணிக்கப்படுகிறது. ஜிம்பாப்வே அணியை சமீபத்தில் ஆப்கான் அணி 4-1 என்று வீழ்த்தியதும் மே.இ.தீவுகள் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
நேபாள் அணியில் உள்ள சந்தீப் லமிச்சானே என்ற லெக்ஸ்பின்னரும் உற்று நோக்கப்படுகிறார். இவர் நேபாளத்திலிருந்து முதன் முதலாக ஐபிஎல் ஒப்பந்தம் வென்ற வீரராகத் திகழ்கிறார்.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அனைத்து ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்துவது என்பது மிகமிக கடினமான ஒரு காரியம், மேற்குஇந்திய தீவுகளுக்கு இது சாத்தியமா என்ற பெரிய கேள்வியுடன் ஹராரேயின் வரும் ஞாயிறன்று தகுதிச்சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றனர்.
ஏற்கெனவே சாம்பியன்ஸ் டிராபிக்கு மே.இ.தீவுகள் தகுதி பெறாமல் போனது, அது பரவாயில்லை என்றாலும் இருமுறை உலக சாம்பியன்களான மே.இ.தீவுகள் இல்லாத கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பையைப் பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் தயாராகவில்லை என்றே மேற்குஇந்திய தீவுகள் ரசிகர்கள் தரப்பிலிருந்து வரும் எதிர்வினையாக உள்ளது.
அடுத்த 3 வாரங்களில் 10 அணிகள் 5 அணிகள் கொண்ட இரு குழுவாகப் பிரிக்கப்பட்டு. இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் டாப் 3 அணிகள் தகுதி பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆடி அதிலிருந்து டாப் 2 அணிகள் 2019 உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.