கொரோனா காலத்தில் வேலையிழந்த அமெரிக்கர்களுக்கு வாரந்தோறும் நிதி உதவி!
கொரோனா காலகட்டத்தின் போது வேலை இழந்த அமெரிக்கர்களுக்கு 22,110 நிதி உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமெரிக்கர்களுக்கும் 44,220 ரூபாயும் நிதி உதவி கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலங்களாக உலகம் முழுவதையும் ஒரு உலுக்கு உலுக்கி கொண்டு தான் உள்ளது என்று சொல்லி ஆகவேண்டும். அதிலும், கொரோனா சீனாவிலிருந்து முதலில் பரவி இருந்தாலும் அதிக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அமெரிக்கா தான். தற்பொழுது வரையிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை அமெரிக்காவில் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் கடுமையாக சீர்குலைந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் வேலை இழந்தோர் எண்ணிக்கை குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 8 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.
புதிய ஊரடங்கு நாளுக்கு நாள் அமல்படுத்தப்படும் பொழுது சில நிறுவனங்கள் மூடப்படுகிறது, சிலர் தங்களது நிறுவனத்தில் ஆட்களை குறைப்பதையும் வழக்கமாகி கொண்டே செல்கிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார பாதிப்பு நடவடிக்கையாக 73.70 லட்சம் கோடி உதவிக்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் தற்போது இதற்கான உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வாரம் 22 ஆயிரத்து 110 ரூபாய் நிதி உதவியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமெரிக்கர்களுக்கும் தலா 44 ஆயிரத்து 220 ரூபாய் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் வழங்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.