வெளியாகிய துக்ளக் தர்பார் பட டீசருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கடும் கண்டனம்!
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட துக்ளக் தர்பார் படத்தின் டீசருக்கு நாம் தமிழர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகன்னா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துக்ளக் தர்பார். இந்த படத்திற்கான டீசர் நேற்று முன்தினம் வெளியாகியதை அடுத்து, இந்த டீசருக்கு சில சர்ச்சையான விமர்சனங்களும் வெளியாகியது. இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்கக்கூடிய பார்த்திபன் ராசிமான் எனும் பெயர் கொண்டவராகவும் அவர் மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம் எனும் கட்சியை வைத்து நடத்துவதாகவும் அந்த டீசரில் உள்ள ஒரு போஸ்டர் இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த போஸ்டரில் புலி உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இது தற்பொழுது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
சமூக வலைதளங்களிலும் இது குறித்து பரபரப்பாக விவாதமும் உருவாகியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், துக்ளக் தர்பார் திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு எதிரானது போல சில காட்சிகள் இடம் பெற்றிருப்பது தங்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்குவதாகவும், இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் தெரியாமல் நடந்துவிட்டது என கூறியதுடன், இதுபோன்ற காட்சிகளை சிஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி முழுவதுமாக படத்திலிருந்து நீக்கி விடுவேன் எனவும் உறுதி அளித்து இருந்தார்.
இருந்தாலும் இதுபோன்ற காட்சிகளை எடுத்த இயக்குனர் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த காட்சிகளுடன் படம் திரைக்கு வந்தால் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்வதாகவும், இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பு இழுக்கும் வேலையை விடுங்கள் அல்லது கலைத்துறையில் இருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.