3.6 கோடி இணைப்புகளை இழந்த வோடபோன் நிறுவனம்.!
- தொலைபேசி இணைப்புகள் பற்றி டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.
இந்தியாவில் 2019 நவம்பர் நிலவரப்படி தொலைபேசி இணைப்புகள் (செல்போன் ,லேண்டுலைன் ஆகிய இரண்டும் அடக்கும்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது.
தொலைபேசி இணைப்புகள் பற்றி டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 118.38 கோடியாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு மாதமும் ஏற்ற ,இறக்கத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக குறைந்தது. முந்தைய மாதத்துடன்ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது.
நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் அக்டோபர் மாதத்தில் 68.17 கோடியாக இருந்த இணைப்புகள் நவம்பர் மாதத்தில் 66.60 கோடியாக குறைந்தது. கிராமப்புறங்களில் 52.32 கோடியாக இருந்த இணைப்புகள் 50.99 கோடியாக குறைந்தது. இதனையடுத்து செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 115.44 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ 56 லட்சம் புதிய இணைப்புகளையும் , பி.எஸ்.என்.எல். 3.41 லட்சம் இணைப்புகளையும் , பாரதி ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளையும் வழங்கி உள்ளது.ஆனால் அதே நேரத்தில் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.