“எங்களின் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா”- சீன அரசு அதிரடி உத்தரவு!
சீனாவில் தயாரிக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்துகளை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் குறையதொடங்கிய நிலையில், தற்பொழுது மீண்டும் பரவத்தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது.
இதில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் பல நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்துகளை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள், சீனா வர அனுமதி மறுக்கப்பட்டது. இதன்காரணமாக சீனாவில் படித்துவந்த 23-ஆயிரம் இந்திய மாணவர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார்கள். தற்பொழுது இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களால் தங்களின் படிப்புகளை ஆன்லைனில் கூட தொடர முடியவில்லை. இதனால் மாணவர்கள் உட்பட வெளிநாட்டு பயணிகளை மீண்டும் அனுமதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் என்றும், இதனால் மாணவர்கள் உட்பட சீனா வரும் அனைவரும் கண்டிப்பாக சீன கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்றும், இதர நாட்டின் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதுவரை சீன தடுப்பூசியைப் போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.