விசா ரத்து விவகாரம்.! டிரம்பின் நிர்வாகத்தின் மீது 17 மாநிலங்கள் வழக்கு.!
17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1.30 லட்சத்துக்கும் அதிகமானார் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிககள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன.
இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வருகிற வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பு தொடர்பாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், யேல், டீபால், சிகாகோ பல்கலைக்கழகம், டஃப்ட்ஸ், ரட்ஜர்ஸ் மற்றும் இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட சுமார் 40 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குக்கு ஆதரவாக அறிவிப்புகளை தாக்கல் செய்துள்ளனர்.
சமீபத்தில், டிரம்ப் நிர்வாக விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு அல்லது நிரந்தர தடை விதிக்க கோரி ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.