மறைந்த மனைவியை கணவன் கண் முன் கொண்டுவந்து மகிழ்வித்த விர்சுவல் ரியாலிட்டி!
தென்கொரியாவை சேர்ந்த குழு உயிரிழந்த பெண்மணி ஒருவரை மீண்டும் விர்சுவல் ரியாலிட்டி மூலமாக கற்பனை உலகில் கொண்டுவந்து அவரது கணவரை நடனமாடி மகிழ்விக்க செய்துள்ளது.
முன்பு காலத்தில் எல்லாம் உயிரிழந்தவர்களின் நினைவுகளுடன் வாடிய குடும்பங்கள், அவர்களின் புகைப்படங்கள் ஏதாவது ஒன்றோ இரண்டோ கிடைத்தால் அதை பார்த்து ஏங்குபவர்களையும் தான் நாம் கண்டு வருத்தப்பட்டு இருப்போம். ஆனால் தற்பொழுது ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது நினைவாக அவரது பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதள புகைப்படங்கள் என அனைத்தும் கையிலேயே வைத்துக் கொண்டு அவர்கள் உயிருடன் இருப்பது போன்ற பிம்பத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இதற்கும் ஒரு படி மேலே சென்று தென்கொரியாவில் கடந்த வருடம் இறந்து சில மாதங்கள் ஆன குழந்தையை நீண்ட நாட்களுக்குப் பின்பு அவரது தாய்க்கு நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சியை விர்சுவல் ரியாலிட்டி மூலம் தென் கொரியாவை சேர்ந்த குழு ஒன்று கொடுத்தது.
நெகிழ்ச்சி அடைந்த தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்தது. அதேபோல தற்பொழுதும் தென்கொரியாவில் இறந்துபோன மனைவியுடன் கணவர் நடனம் ஆடக் கூடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு காரணமும் அதே விர்சுவல் ரியாலிட்டி தான். மீட்டிங் யு எனும் பெயரில் மகளிடம் தாய் உரையாடியது போல தற்போது உயிரிழந்த தென்கொரியாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் நடை உடை பாவனைகள் அனைத்தையும் கணினியில் பதிவேற்றி, ஆறுமாத கடின உழைப்பிற்குப் பின் நிஜ உலகின் அதிசய படைப்பாக கற்பனை உலகில் அந்த பெண்ணின் கணவருக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி கவசத்தை கொடுத்து மனைவியுடன் இருக்கும் தருணத்தை உணர வைத்துள்ளனர்.
பல நாட்கள் கழித்து உயிரிழந்து தனது மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் தனது பாசத்தை பரிமாறி அவருடன் இணைந்து நடனமாடியுள்ளார். இவரது செயல்கள் அனைத்தும் வீடியோவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பலரையும் கண்கலங்க வைத்ததுடன் இப்படியும் இனி வாழ முடியுமா என்று வியப்படையும் செய்துள்ளது.