பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்தும், பாஜக - ஆர்எஸ்எஸ் உறவுகள் குறித்தும் பல்வேறு கூற்றுகள் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகின்றன.

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அவர் வருகை புரிந்தது, அங்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசியது ஆகியவை பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு தீவிரம் சேர்த்துள்ளது. இதனைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுக்களில் மிக முக்கியமானது பிரதமர் மோடி ராஜினாமா பற்றிய செய்திகள்.
அதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் எனும் இந்துத்துவா அமைப்பானது பாஜகவின் சித்தாந்த அடித்தளமாகவும், தொண்டர்களை அணி திரட்டும் முக்கிய அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளின் விதிமுறைகளின் படி ஒரு நபர் 75 வயதை கடந்து விட்டால் அவர் கட்சி மேலிட பொறுப்புகளில் அங்கம் வகிக்க முடியாது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வந்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது பூர்த்தி ஆகிவிடும். இதனை சுற்றி தான் தற்போது பேச்சுக்கள் எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவ்வப்போது பேச்சுகள் எழுந்தன. மோடியின் தலைமையிலான பாஜக, தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டன. தனிநபர் சார்ந்த அரசியலை பாஜக முன்னெடுத்தது ஆர்எஸ்எஸ்-க்கு சற்று உறுத்தலாக இருந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் உறுதுணையாகவே செயல்பட்டது.
இப்படியான சூழலில் தான், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் மோடி நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றது குறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்தார். அவர், “மோடி தனது ஓய்வை அறிவிக்கவே நாக்பூர் சென்றார்; ஆர்எஸ்எஸ், பாஜக தலைமையை மாற்ற விரும்புகிறது” என்று கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி நாக்பூர் ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பேசிய பாராட்டு உரை ஆர்எஸ்எஸ் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஆர்எஸ்எஸ் – பாஜக உறவில் ஒரு சமரசத்தை நிகழ்த்தியுள்ளது என அரசியல் வட்டாரத்தில் சுட்டிக்காட்டுகின்றன. மோடி, ஆர்எஸ்எஸ்-ஐ குறிப்பிட்டு பேசுகையில், “இந்தியாவின் அழியாத கலாச்சாரத்தின் ஆலமரம்” என்று புகழ்ந்தார். இதனால் இரு தரப்பிலும் இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தரப்பிலும், “பாஜகவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மகாராஷ்டிரா மாநிலம் பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், 2029-லும் நரேந்திர மோடி தான் பிரதமராக தொடர்வார் என குறிப்பிட்டுள்ளார்.