2000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்.!
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் தனது சேவ் சக்தி அமைப்பின் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரபல நடிகையான வரலட்சுமி, தனது சேவ் சக்தி பவுண்டேஷன் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரலட்சுமியின் தாயான சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் இணைந்து, தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சென்னையிலிருந்து சொந்த ஊரான மேற்கு வங்காளத்திற்கு செல்லும் 2000புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்கு செல்லும் வரை தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்களையும், தண்ணீர், முககவசம் ஆகியவற்றையும் வரலட்சுமி சரத்குமார் வழங்கி உதவியுள்ளார். இந்த பொருட்களை வரலட்சுமியுடன் அவரது தாயான சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு பொருட்களை வழங்கியுள்ளனர். இவற்றை செய்ய உதவியாக இருந்த சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு. கவுதம் சந்தர் மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். ஏற்கனவே சேவ் சக்தி அமைப்பின் மூலம் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.