காதலர் தின சுவாரசியங்கள்…!!
அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.
காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.
கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு
அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.
காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.