தடுப்பூசி விவகாரம் : இந்திய பயணிகள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் – இங்கிலாந்து அரசு!
இனிமேல் கோவிஷீல்ட் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்து அரசு இந்தியாவில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி போடாத நபர்களாக கருதப்பட்டு பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு தான் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடு கடந்த அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே இதனால் சற்று பிரச்சினை நீடித்து வந்தது. இதனை அடுத்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்து வரும் 14ஆம் தேதி முதல் இரு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப் பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.