தடுப்பூசி போட்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய வேண்டாம் – தென்கொரியா அரசு!
தென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஜூலை மாதம் முதல் மாஸ்க் அணிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் உலகின் பல நாடுகளில் இன்னும் அமலில் உள்ள நிலையில், தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தற்பொழுது சில நாடுகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கான ஊரடங்கு தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தென் கொரியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 700 அதிகமானோர் அங்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அங்கு 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஜூலை மாதம் முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. 2 டோஸ் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஒரு டோஸ் எடுத்துக் கொண்டால் கூட மாஸ்க் அணிய தேவையில்லை என தெரிவித்துள்ளதுடன், ஜூன் மாதம் முதல் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் கூட்டமாக கூட அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் 5.2 கோடி மக்கள்தொகை காணப்படும் நிலையில் அங்கு வெறும் 7.7 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென் கொரியா திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் தான் மக்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.