உலகம் முழுக்க கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
இந்த கொரோனா விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பிற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கவேண்டிய நிதியை ட்ரம்ப் தர மறுத்துள்ளார்.
இதுகுறித்து, ட்ரம்ப் பேசுகையில், ‘ அமெரிக்க அளிக்கும் நிதியின் மூலம் உலக சுகாதார நிறுவனம் நல்ல பலன்களை தருகிறதா என தனது அரசாங்கத்திற்கு கவலை எழுந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது அதன் கடமையை ஆற்ற தவறவிட்டது.
அதற்கு முழு பொறுப்பு அந்த அமைப்புதான். கொரோனா பரவல் விவகாரத்தில் சீனா அளித்த தவறான தகவல்களை முன்னிலைப்படுத்தி வந்தது.
அப்படி செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். சுகாதார அச்சுறுத்தல்கள் பற்றிய சரியான தகவல்கள் உரிய நேரத்தில் உலக சுகாதார அமைப்பு மூலம் உலக நாடுகளுக்கு கொடுக்கப்படவேண்டும்.
அந்த வகையில் ஏற்பட்ட தோல்விகளுக்கு அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், உலக சுகாதார அமைப்பில் உரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டால், அந்த அமைப்புடன் தொடர்ந்து கைகோர்த்து பயணிக்க தயார்.’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு தர வேண்டிய நிதியை நிறுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் கூறுகையில், ‘ உலக சுகாதார அமைப்பான WHO-விற்கோ அல்லது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேறு அமைப்பிற்கோ நிதியை குறைப்பதற்கான தகுந்த நேரம் இப்போது அல்ல.
இந்த வைரஸையும் அதன் விளைவுகளையும் தடுக்க சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம்.’ என தனது கருத்தை கூறி உள்ளார்.