‘குறுகிய கால கோடீஸ்வரர்கள்’-அமெரிக்க தம்பதியின் வங்கிக்கணக்கில் ரூ.3.7 லட்சம் கோடியை செலுத்திய வங்கிநிறுவனம்..!
அமெரிக்க வங்கி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் இருக்கும் தம்பதியின் வங்கி கணக்கில் ரூ.3.7 லட்சம் கோடியை தவறுதலாக அனுப்பியதால் குறுகிய கால கோடீஸ்வரர்களாக உணர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மாநிலம் லூசியானாவில் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் டேரன் ஜேம்ஸ். இவர் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்ப வங்கி கணக்கில் தற்செயலாக 50 பில்லியன் டாலர் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3.7 லட்சம் கோடி. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக கணவருக்கு தெரிவித்துள்ளார். இதனால் சிறிது நேரம் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டதை போல் இவர்கள் உணர்ந்துள்ளனர்.
வங்கி கணக்கில் பல பூஜ்ஜியங்களோடு ஒரு தொகையை பார்த்தது வித்தியாச உணர்வாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த பணம் எங்கிருந்து யாரால் வந்தது என்று தெரியாததால் வங்கியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் வங்கியும் இந்த பிழையை விசாரித்துள்ளது. பணம் எங்கிருந்து வந்தது என்பதை பற்றி தெரிவிக்கவில்லை ஆனால், பணத்தை ஒரு சில நாட்களில் வங்கிக்கணக்கிலிருந்து மாற்றியுள்ளது.
இதனை பற்றி தெரிவித்த டேரன், வைப்புத்தொகை ஒரு சில நாட்களில் இவர்களின் வங்கி கணக்கிலிருந்து மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வைப்புத்தொகை இருந்தபொழுது அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துள்ளார். மேலும், இந்த பணத்தை வைத்துக்கொள்ள அனுமதித்திருந்தால் அதை வைத்து தேவைப்படுபவர்களுக்கு உதவுவதாகவும், குழந்தைகள் மருத்துவமனை அமைக்க பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.