20 ஆண்டு கால போா் முடிவு.., தாயகம் திரும்பிய அமெரிக்க இராணுவ ஜெனரல்..!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை முன்னின்று வழி நடத்தி வந்த அமெரிக்க இராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ். மில்லர் முதலாவதாக நாடு திரும்பினார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் 20 ஆண்டு கால போா் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என அதிபா் ஜோ பைடன் அறிவித்தார். சமீபத்தில் தோஹாவில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுவாா்த்தை உடன்பாடு ஏற்பட்டது. அதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என முடிவுகள் எட்டப்பட்டன. இதனால், நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அதிபா் பைடன் அறிவித்திருந்தாா். இதைத்தொடர்ந்து, அமெரிக்க படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை முன்னின்று வழி நடத்தி வந்த அமெரிக்க இராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ். மில்லர் முதலாவதாக அமெரிக்க நாடு திரும்பினார். மேரிலாந்து விமான தளத்திற்கு வந்த அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ். மில்லருக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் வரவேற்பு அளித்தார். இதற்கிடையில் அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நிலையில் ஆப்கானிஸ்தானில் முக்கிய பகுதிகளை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்திற்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த போரில் 2400 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.