உணவு பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.! – ஐ.நா எச்சரிக்கை.!
கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் முடங்கி போய் உள்ளன. இதனால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பரிமாற்றமும் தடைபட்டுள்ளது. இது குறித்து ஐநா அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த அறிக்கையை ஐ.நா, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தலைவர் கியூ டோங்கியா, உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெஸ்ரோஸ் கெப்ரியாசிஸ்;, உலக வர்த்தக அமைப்பு இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
அதில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலக நாடுகள் முடங்கி போயுள்ளன. இதனால், சர்வதேச அளவில் வர்த்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் பகிர்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதே பல நாடுகளின் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் நடப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். போக்குவரத்து தடைபட்டுள்ளதால், உணவு பொருட்கள் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள உணவு தட்டுப்பாடு சூழ்நிலையை உலக நாடுகள் கவனமாக கையாள வேண்டும். அப்படி இல்லையென்றால், உலகம் முழுதும் உணவு பொருட்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். என அந்த அறிக்கையில் அவர்கள் கூறி உள்ளனர்.