உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு:பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்தது ..!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு வருட காலமாக இழுத்தடித்துள்ளனர். இதனையடுத்து, சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் மாணவியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பப்பு சிங் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் பிறகு இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. உன்னாவ் சிறுமிக்கு ஆதரவாகப் பல குரல்கள் எழத்தொடங்கின. பாஜக எம்.எல்.ஏ-வை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களுக்குப் பிறகு இந்த வழக்கை அலஹாபாத் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழும்பியது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பிறகு பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். பிறகு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. கடந்த சில வாரங்களாக விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ போலீசார், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச போலீசார் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரது கூட்டாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்காக எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிக்கையில் அவர்களது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிட்டதாக அவர் கூறினார். அதேபோல், ‘பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப கால தாமதம் செய்துள்ளனர். ரத்த மாதிரி மற்றும் துணி உள்ளிட்டவற்றை தடவியல் சோதனைக்கு அனுப்பவும் இல்லை’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்