உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், தனது நாட்டைக் காப்பாற்றக் முடிந்தவரை கடுமையாகப் போராடி வருகிறது. ஐந்தாவது நாளாக தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த வாகனங்கள் அல்லது நடை பயணமாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்திருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.