நாட்டை காக்க ஆயுதம் ஏந்திய உக்ரைன் நடிகர் காலமானார்..!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணையலாம் என உக்ரைன் அதிபர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பலர் ராணுவத்தில் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த வாரம் உக்ரைன் நடிகர் பாஷா லீ உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார்.
இந்நிலையில், தனது நாட்டை காப்பாற்றும் போது ரஷ்ய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் பாஷா லீ தனது உயிரை இழந்தார். லீ 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி-நகைச்சுவைத் திரைப்படமான செல்ஃபி பார்ட்டி மற்றும் விளையாட்டு அதிரடித் திரைப்படமான தி ஃபைட் ரூல்ஸ் ஆகிய திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். நடிப்பைத் தவிர, பிரபலமான உக்ரேனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘டே அட் ஹோம்’ தொகுப்பாளராகவும் புகழ் பெற்றார்.
நடிப்புடன், டப்பிங், பாடல் மற்றும் இசையமைப்பிலும் பெயர் பெற்றார். கடந்த சனிக்கிழமை பஷா லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், கடந்த 48 மணிநேரமாக ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து நமது வீரர்கள் போராடியதை கண் முன்னே பார்க்க முடிந்தது. உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.