உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு – அதிபர் அறிவிப்பு!
உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் உயர்த்தி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவிப்பு.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் உயர்த்தி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ரஷ்ய படைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால், உக்ரைன் ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் வகையில், ஆர்வமுள்ள நபர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன.
ரஷ்யாவை எதிர்த்து சொந்த மண்ணிற்காக போராட உக்ரைன் பொதுமக்களுக்கும் ஆயுதங்களை வழங்கப்பட்டு, ரஷ்ய படைகளை எதிர்ப்பதற்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காகவும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் உயர்த்தி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்திருந்தது. அதனால் போர் விவகாரம் தொடர்பாக பெலாரசில் உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
உக்ரைனில் தற்போது ரஷ்ய படைகளின் தாக்குதல் சற்று குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, ரஷ்யாவின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களையும், ராணுவ தளவாடங்களையும் அழித்து விட்டதாக உக்ரைன் அறிவித்திருந்தது. இதுபோன்று உக்ரைனில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.