தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப் பதிவு !
தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகம் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் அனுமதியின்றி தலைமைச் செயலகத்திற்குள் வந்ததாகக் கூறி, போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது, போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய போலீசார், நேற்று இரவு முதல் அண்ணாநகர், அயனாவரம் உள்பட பல்வேறு இடங்களில் வெற்றிவேலை தேடியதாகவும், ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 4 உதவி ஆணையர்கள் மற்றும் 6 ஆய்வாளர்கள் அடங்கிய 7 தனிப்படையினர் வெற்றிவேலை தொடர்ந்து தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.