புதிய கட்சி நிரந்தரம் அல்ல!அதிமுகவை மீட்டெடுக்கும் வரை இந்த பெயர்!
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும் என தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை அரசியல் செய்வதற்கு தங்களது அணிக்கு அரசியல் ரீதியான அமைப்பு ஒன்று தேவை என்பதை உணர்ந்த தினகரன், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தங்களது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் மூன்று கட்சி பெயர்களை வழங்கி, அவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறும் கோரினார்.
தினகரனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து மேலூரில் இன்று பொதுக்கூட்டத்தை கூட்டி தனது தலைமையிலான இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன்.
கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார் தினகரன். அதிமுகவின் கொடியை போன்றே கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியின் நடுவே ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 108 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை தினகரன் ஏற்றி வைத்தார்.
கட்சி பெயரை அறிவித்து பேசிய தினகரன், அதிமுகவை மீட்டெடுக்கும் வரை இந்த பெயரில் தான் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தலையும் எதிர்கொள்வோம். சட்டமன்ற தேர்தலில் வென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த தினகரன், அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்போம் என சூளுரைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.