வரலாற்றில் முதல் முறையாக தலீபான் தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்திய டிரம்ப்..!
ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு கொண்டுவர தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.
இதனால் கடந்த 29-ம் தேதி கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ முன்னிலையில் தலீபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியும் கையெழுத்து இட்டனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் தாக்குதல்களை தொடங்கினர். இதனால் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தலீபான்களின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக பேசினார்.
35 நிமிடம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் வன்முறை குறைந்ததால்தான் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது. எனவே வன்முறை கூடாது என டிரம்ப் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தலீபான் தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது என கூறினார்.