புலம்பும் ட்ரம்ப் : கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்பே பயன்படுத்தாதது வெட்கம்.!
உலக முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான், ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அமெரிக்காவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தும் கூட கொரோனா வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில், வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,67,629 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 10,941 ஆக அதிகரித்துள்ளது. இதைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் உறைந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தப்படக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளது. இந்த மருந்து, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவக்கூடியதாகும் என்றும் எரித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக்காக இது வேலை செய்வதுடன், பாக்டீரியா தொற்றுக்கு எதிராகவும் பயன்படும் என தெரிவித்தார்.
இந்த ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்து வேலை செய்தால், அதை நாம் தொடக்கத்திலேயே செய்யாதது வெட்கக்கேடானது என ட்ரம்ப் புலம்பியுள்ளார். மீண்டும் நீங்கள் மருத்துவ வழியாக செல்ல வேண்டும் என்றும் ஒப்புதலைப்பெற வேண்டும் என தெரிவித்தார். மருத்துவ வல்லுனர்கள் இதன் பக்க விளைவுகளை அறிவார்கள். அதே நேரத்தில் அதன் செயல்படும் திறனையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த மருந்து வேலை செய்யும் என்று நம்புவோம் என்று தெரிவித்தார்.