பதிலுக்கு பதில் வரி விதிப்போம்.., இந்தியாவில் தான் அதிக வரி! டிரம்ப் அதிரடி!
அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகளில் என்ன இறக்குமதி வரி விதிக்கப்படுமோ அதே அளவு வரி அமெரிக்காவில் அந்தந்த நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரசனைகளை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலை சந்தித்தார் டொனால்ட் டிரம்ப். தற்போது வெற்றிபெற்ற பிறகு அதற்கான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு தற்போது வரி விகிதங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
எவ்வளவு வரியோ, அதே அளவு வரி…,
அதாவது, அமெரிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு அரசு என்ன இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியானது அந்நாட்டு பொருட்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் என்ற புதிய வரி விதிப்பு உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் இறக்குமதி வரியானது அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல, கணினி சிப், மற்ற சில தொழில்நுப்ட பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு அந்தந்த நாடுகளில் விதிப்பது போல வரி விலக்குகளும் அளிக்கப்படும் என டிரம்ப் உத்தரவில் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வருவாயை அதிகரிப்பதற்கும், பன்னாட்டு வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கும், அதிக வரி விதிக்கும் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அமெரிக்காவின் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் இந்த புதிய வரி விதிப்புகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
சாதகமா? பாதகமா?
இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டால், அந்த பொருட்களின் விலை அமெரிக்காவில் உயரும் என்றும் இதனால் மீண்டும் விலையேற்றம் தான் வரும் என அந்நாட்டு சில பொருளாதர வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதேபோல, வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் அரசுக்கு வருவாய் கிடைக்கும், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. இந்த வரி விதிப்பு எப்போது முதல் அமலாகும் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா, தாய்லாந்து போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அதிக வரிவிதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் குறைவான வரி விதிப்பு வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்ட தென் கொரியா போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில்…,
இந்தியாவில் அமெரிக்க ஆட்டோமொபைல் தயாரிப்புகளுக்கு 25% இறக்குமதி வரி விதித்தால், அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் தயாரிப்புகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் சராசரியாக 9.5% வரி விதிக்கப்படுகிறது. அதுவே அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 3% மட்டுமே விதிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டு பொருட்களுக்கு 6.5%-மும், சீனா பொருட்களுக்கு 7.2% வரியும் அமெரிக்காவில் விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக வரி :
இந்த வரி விதிப்பு நடைமுறைகளை அடுத்து தான் பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் முடிந்த பிறகு டொனால்ட் டிரம்ப் தனியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எலான் மஸ்க் – பிரதமர் மோடி சந்திப்பு குறித்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப் பதில் அளித்தார்.
பிரதமர் மோடி – மஸ்க் சந்திப்பு குறித்து டிரம்ப் பேசுகையில், ” அந்த சந்திப்பு பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் சந்தித்தார்கள் அவ்வளவுதான். அவர் (மஸ்க்) இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புகிறார் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் வணிகம் செய்வது சற்று கடினம். இந்தியாவில் வரி விதிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்துக்கள இந்தியாவில் வரிகள் அதிகமாக விதிக்கப்படுகிறது. அதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு அதே வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.