ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஆதரவு
கொரோனா வைரஸைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 46,34,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.155,285 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை இருந்ததால் அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்பாமல் இருந்தது. இதனால் அதிபர் டிரம்ப் மருந்து அனுப்பினால் பாராட்டு, இல்லையென்றால் பின்விளைவு ஏற்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி பாராசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பியது மத்திய அரசு. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப், அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு இந்த 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.
ஆனால் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு மற்றும் இதயப்பிரச்னைகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.எனவே மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பாதுகாப்பு அச்சம் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சிலரும், பலரும், முன்னணி மருத்துவர்களும் அதை நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இது மலேரியா, லூபஸ் மற்றும் பிற விஷயங்களுக்கானது. இது பாதுகாப்பானது. இது சிக்கல்களை ஏற்படுத்தாது. யாரையும் காயப்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.