போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை வளைகுடா நாடான குவைத் அரசு சட்டநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது.
வளைகுடா நாடான குவைத் நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான திருத்தப்பட்ட சட்டம் நாட்டின் தேசிய சட்டமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி வாகனங்களை பொறுப்பற்ற நிலையில் ஓட்டுவது, சிவப்பு விளக்குகளை எரிய வைத்துக்கொண்டு ஓட்டுவது, வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 200 முதல் 500 தினார் வரை அபராதம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என சட்டத்தில் உள்ளது. இத்துடன் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை முன் இருக்கையில் அமரவைத்து வாகனத்தை ஓட்ட அனுமதிக்க கூடியவர்களுக்கு 100 முதல் 200 தினார் வரை அபராதமும், இரண்டு மாத சிறை தண்டனையும் அனுமதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மற்றொரு நபரின் வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின் கீழ் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தின் போது சேதத்தை விபத்தின் மூலம் ஏற்படுத்துதல், குறைபாடுள்ள வாகனத்தை தெரிந்தே ஓட்டுதல், சரியான போக்குவரத்து பாதைகளில் ஓட்டாமல் தாறுமாறாக ஓட்டுதல் போன்ற அனைத்து குற்றங்களுக்கும் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள், உயர் மின் விளக்குகளை பயன்படுத்துபவர்கள், அதிக சத்தம் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் 50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.