இந்திய தேசத்தின் சொத்து ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த தினம் இன்று …!
மகாத்மா காந்தி அவர்களால் இந்திய தேசத்தின் சொத்து என அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி எனும் ஊரில் பிறந்தவர் தான் ப.ஜீவானந்தம். மகாத்மா காந்தி அவர்களால் இந்திய தேசத்தின் சொத்து என்று அழைக்கப்பட்ட இவர் பொதுவுடமை கொள்கைக்காக பாடுபட்டவர். இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் எனும் திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்டதிலிருந்து கதர் ஆடை அணியத் தொடங்கினார்.
அதன் பின்பு தீண்டாமை ஒழிப்பிலும் அதிகளவில் ஈடுபட தொடங்கியுள்ளார். பின்பு 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். அதன் பின்பும் பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்கள் தற்பொழுது வரை பலரையும் எழுச்சி அடைய செய்யக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் 1963 ஆம் ஆண்டு தமது 55 ஆவது வயதில் இவர் மறைந்துள்ளார். தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்காக உழைத்த ஜீவானந்தம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ஜீவானந்தம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.