பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த தினம் இன்று…!
பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் தான் ஈ.வெ.ராமசாமி என அழைக்கப்படும் தந்தை பெரியார் பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர் இவர் தான்.
மக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கையும், அந்த மூட நம்பிக்கைக்கு காரணமான கடவுள் நம்பிக்கையும் எதிர்த்த இவர், தமிழ் சமூகத்திற்காக மிகப் பெரும் புரட்சிகளை எல்லாம் செய்துள்ளார். இவர் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல பட்டங்களால் அறியப்படுகிறார்.
இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யக்கூடிய வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். இவரது சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யுனெஸ்கோ நிறுவனம் புத்துலக தொலைநோக்காளர், தென்னிந்தியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை எனப் பாராட்டி விருது வழங்கியது.
சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி தனது 94-வது வயதில் மறைந்தார்.மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6-ம் தேதியன்று 110 விதியின் கீழ் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ளார்.