இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜியின் பிறந்த தினம் இன்று..!
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜியின் பிறந்த தினம் இன்று.
1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் தாதாபாய் நவ்ரோஜி. இவர் இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர். எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கை தத்துவ உதவி பேராசிரியராக பணியாற்றிய இவர் 1852 ஆம் ஆண்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் மும்பை சட்டப் பேரவை உறுப்பினராக 1885 முதல் 1888 வரை பணியாற்றியுள்ளார். இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெரும் தலைவர்களின் வழிகாட்டியாக திகழ்ந்து உள்ளார். மேலும் 1870ஆம் ஆண்டு இந்தியர்களின் தனி நபர் வருமானம் வெறும் இருபது ரூபாய் தான் என சுட்டிக்காட்டிய இவர், இந்திய நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளி விபரத்துடன் எடுத்து கூறியுள்ளார்.
மேலும், பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். சுயராஜ்ய கொள்கையை முதன் முதலில் பிரகடனம் செய்தது இவர் தான். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைவதற்கு பெரும் பங்களிப்பு செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92-வது வயதில் 1917 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.