பென்சிலின் மருந்தை கண்டறிந்த அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்தநாள் இன்று!
பென்சிலின் மருந்தை கண்டறிந்த அலெக்சாண்டர் பிளெமிங் அவர்களின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1881 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6-ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள லாக்பீல்டுபார்ம் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் அலெக்சாண்டர் பிளெமிங். தனது கல்வி படிப்பை இயற்கை சூழ்ந்த மலைப்பகுதிகளில் கற்றதால் அங்கு இயற்கையை ரசிக்கவும், இயற்கையில் உள்ள எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றுள்ளார். தனது 20 வயதிலேயே நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போல தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என நினைத்து அவரிடமே உதவியாளராகவும் சேர்ந்துள்ளார்.
அதன் பின்பு நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளை செயற்கை முறையில் வளர்த்து, அதில் திடீரென்று தோன்றிய நீல நிறத்திலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டறிந்துள்ளார். இவருக்கு 1945 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பென்சிலின் மருந்து கண்டறியப்படுவதற்கு முன்பெல்லாம் சிறிய காயங்கள் ஏற்பட்டால் கூட பலர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. இந்த பென்சிலின் கண்டுபிடித்த பின்னர் இதனால் உலகெங்கிலும் உள்ள 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக என ஒரு மதிப்பீடு கூறுகிறது.
இவ்வாறு நுண்ணுயிரியல் துறையில் பல சாதனைகள் படைத்த அலெக்சாண்டர் பிளெமிங் அவர்கள் 1955 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தனது 73 வது வயதில் லண்டனில் உயிரிழந்துள்ளார். அதன் பின் 1999 ஆம் ஆண்டு டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலிலும் அலெக்சாண்டர் பிளமிங் உள்ளடக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் கண்டுபிடித்த பென்சிலின் மருந்து ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் நினைவாக சிறு கோள்கள் படையிலுள்ள சிறுகோள் ஒன்றிற்கு 91006 பிளெமிங் என பெயரிடப்பட்டுள்ளது.