வரலாற்றில் இன்று(17.02.2020)… தமிழறிஞர் வையாபுரி மறைந்த தினம் இன்று…
பிறப்பு மற்றும் கல்வி:
திருநெல்வேலி மாவட்டம் சரவணப்பெருமாள் பாப்பம்மாள் தம்பதிகளுக்கு மகனாக அக்டோபர் 12, 1891ல் பிறந்தார் தமிழறிஞர் வையாபுரி. இவர், பாளையங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருநெல்வேலி கல்லூரிப் படிப்பில் சென்னை மாகாணத்திலேயே தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று சேதுபதி தங்கப்பதக்கம் பெற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
தமிழ்தொண்டு:
தமிழ் தாத்தாஉ.வே.சா.விற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. இவர் தமிழ் ஆராய்ச்சியில் விஞ்ஞான பூர்வமான பார்வையோடு ஆய்வு செய்தவர். சங்ககால மக்கள் அறிந்த மற்றும் பயன்படுத்திய உலோகங்களின் அடிப்படையில் காலநிர்ணயம் செய்து உலகிற்க்கு எடுத்துக்கூறினார். கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். ஆனால் வையாபுரிப்பிள்ளையோ தமது ஆய்வின் முடிவுகளை முற்றுப்பெற்றதாகக் கூறவில்லை. மேலும் இவர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராக இருந்த காலத்தில் மலையாள மொழி லெக்சிகன் பதிப்பிக்கப்பட்டது. இவரின் ஆய்வு மாணவர்தான் சுப்பிரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, தமிழின் பழம்பெருமைக்கு எதிரானவர் வையாபுரிப்பிள்ளை என்று திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் இவர் பெரும்பங்கு வகித்தவர். கம்பனை ஆதரித்தவர் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் ஒருவர் எஸ். வையாபுரிப்பிள்ளை. 1936 முதல் 1946 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை ஆராய்ச்சி தலைவராகப் பணியாற்றினார்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியுடன் வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முடிந்துவிடவில்லை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கிய அவர் 1955ல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது ஆவல் மட்டும் இறுதி வரை நிறைவேறாமலே போய்விட்டது. இவர், 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். தமிழ்தொண்டாற்றிய வையாபுரிபிள்ளை மறைந்த தினம் வரலாற்றில் இன்று.