TMP வங்கியில் 6 லட்ச ரொக்கம்,3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மணப்பாறையை சேர்ந்த அந்த வங்கியின் ஊழியர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மன்னார்குடியை அடுத்துள்ள அசேஷம் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி முனையில் சுமார் 6 லட்ச ரூபாய் ரொக்கம், ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளை தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கொள்ளையர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் மணப்பாறையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை விசாரணைக்காக போலீசார் மன்னார்குடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோல் மற்றொருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.