தலைமை அலுவலகத்தை லண்டனில் திறக்க டிக் டாக் முடிவு
லண்டனில் டிக் டாக் தலைமையகத்தை திறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.
இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
இந்நிலையில் டிக் டாக் உள்ளிட்ட சீனா செயலிகள், மக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுகிறதா என ஏராளமான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றதாகவும், இதனால் அந்த செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும், மாதங்கள் தள்ளிப்போகாது என வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் பேட்டி அளித்தார்.இந்நிலையில் தான் டிக் டாக் நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் அதன் தலைமையகத்தை திறக்க முடிவு செய்துள்ளது.இதற்காக இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.