கைமாறும் நிலைக்கு சென்ற டிக்டாக்? “நான் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர போகிறேன்”- டிக் டாக் நிறுவனர்!
தடைகளை எதிர் கொண்டு, நான் மீண்டும் டிக்டாக் செயலியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர போகிறேன் என டிக்டாக் நிறுவனர் ஷாங் யமிங் தெரிவித்தார்.
லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.
இதன்காரணமாக, டிக்டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதன்காரணமாக, டிக் டாக் நிறுவனத்திற்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை கொண்டுவர டிக்டாக் நிறுவனம் தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும், சீன செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிலும் டிக்டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ள நிலையில், டிக்டாக் செயலிகள் தடை செய்வதற்கான அறிக்கை, விரைவில் வெளியாகும் என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
மேலும் டிக்டாக் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள், டிக்டாக்கின் 90 சதவீத பங்குகளை அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு விற்றுவிடுங்கள் என கூறினார்கள். அப்படி செய்தால் டிக்டாக் நிறுவனம் கைமாறி போகக்கூடும் என்பதை அறிந்த டிக்டாக் நிறுவனர் ஷாங் யமிங், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, மற்ற நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க முடியாது எனவும், அவ்வாறு விற்றால் டிக்டாக் நிறுவனம் கைமாறி போகும் என தெரிவித்த அவர், நான் இதை எதிர்கொண்டு டிக்டாக் செயலியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்போகிறேன் என தெரிவித்தார்.