அமெரிக்காவில் நாளையுடன் டிக்டாக், வீ-சாட் செயலிகளுக்கு தடை..!
பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலி தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை சீனாவின் அரசாங்கத்திற்கு அனுப்பப்படலாம் என கூறி டிக்டாக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை விற்க அல்லது முற்றிலுமாக நிறுத்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவை பிறப்பித்தது.
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்க அரசு பைட் டான்ஸுக்கு 45 நாள் காலக்கெடுவை வழங்கியிருந்தது. அதன்படி கொடுக்கப்பட்ட 45 நாள் அவகாசம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. இதனால், டிக்டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலி வீ சாட் ஆகிய இந்த செயலிகளுக்கு நாளையுடன் தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் டிக்டாக்கை நடத்துவதற்கு டிக்டாக்கை ஒரு அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்த வேண்டும் என்றும் அல்லது அனைத்து விவரங்களையும் தங்கள் நாட்டிற்குள் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டிக்டாக் ஆராக்கிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தம் பற்றி கூறிய டிரம்ப், டிக்டாக் செயலியின் அதிக பங்கு பைட்டான்ஸ் நிறுவனத்திடமே உள்ளதாகவும், ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்த பங்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.