ட்ரம்பிற்கு எதிராக டிக்டாக் நிறுவனம் வழக்கு.!
டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார்.
டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, டிரம்ப் தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும்,சில நாள்களுக்கு முன் அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வர்த்தக அமைச்சர் வில்பருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. டிக்டாக் நிறுவனம் கலிஃபோனியாவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறி தங்கள் மொபைல் செயலிக்கு தடைவிதிக்க ட்ரம்ப் முயல்வதாகவும் , ஆனால், இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தனது மனுவில் டிக்டாக் தெரிவித்துள்ளது.