2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை – அமெரிக்க அரசு!
கொரோனாவிற்கான 2 டேஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாக கடைபிடிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்க உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவிலும் தடுப்பூசித் செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா பரவல் தற்போது மிகவும் குறைய தொடங்கியுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவின் முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும், 11 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ்களை எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ள முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அமெரிக்காவிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு நிலையில், தற்பொழுது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் மருத்துவமனை, பொது போக்குவரத்து, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியை இதுவரை செலுத்தி கொள்ளாதவர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.