கொரோனா காலத்தில் அதிகரிக்கும், பயம், பதட்டம், மன அழுத்தம்.! WHO எச்சரிக்கை.!
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே பயம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவை அதிகரித்துள்ளது. – உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங்.
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது உலக நாடுகளில் ஊரடங்கு சிறிதுசிறிதாக தளர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் முழுமையான அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் இன்னும் தங்கள் வீடுகளிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே பயம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவை அதிகரித்துள்ளது இதனை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் அவதிப்பட்டு வருவதாக, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் கூறியுள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளாவிய தற்கொலை இறப்பு புள்ளிவிவரங்களின்படி, தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இருந்து மட்டும் 39 சதவீத தற்கொலைகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கிறது.
‘ கொரோனா தொற்று நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றுவது போல மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்தும் மக்களை காப்பாற்றுவதில் தற்போது கவனம் செலுத்த வேண்டும் எனவும் பூனம் கேத்ரபால் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஊரடங்கு காரணமாக பலரும் தங்கள் வீடுகளில் இருந்து வேலை செய்து வருவதால் குடும்பத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இது மன நலத்தை வெகுவாக பாதிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த மன அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான தடுப்பு வழி முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பூனம் கேத்ரபால் சிங் கூறியுள்ளார்.