நான் பார்த்த படங்களில் மிகவும் சிறந்த படம் இது தான் – இயக்குனர் மிஷ்கின்.!
இயக்குனர் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால். இந்த படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மனிதன் எழுந்தவுடன் தன்னுடன் குதிரைவால் இணைக்கப்பட்டிருப்பதை எப்படி உணர்கிறான் என்பதுதான் படம். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்ததோடு பாராட்டியுள்ளனர்.
இது குறித்து பேசிய மிஷ்கின் “தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங் களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’. ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்திருக்கும் முதல் திரைப்படம் இது தான்.
நான் உள்பட நினைத்ததை 10 சதவீதம் தான் படத்தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீதம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள். ஒரு சைக்காலாஜிக்கல் பயணமாகவே இப்படம் இருந்தது.
நான் படம் பார்க்கும் போது எனக்கு புதுவித உணர்வை கொடுத்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு என் நன்றியும், பாராட்டும். இந்த படம் ஆங்கிலப் படத்துக்கு நிகராக இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இது தான் மிகச்சிறந்த படம் ” என பாராட்டி பேசியுள்ளார்.