திருவண்ணாமலை தீப திருவிழா! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல், சென்னைஉயர்நீதிமனறத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக, திருவண்ணாமலை கோவில் நிர்வாகம், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில், ‘வரும் 29 ஆம் தேதி தீபத் திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அது போல முந்தைய நாளான 28ம் தேதியும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா காரணமாக தேர்த்திருவிழா கோவில் வளாகத்திற்கு நடத்தப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் தேர் திருவிழாவில் கோவில் வளாகத்துக்குள் நடத்தாமல், கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் நடத்த வேண்டும் என்றும், உற்சவர் மாடவீதியில் வலம் வருவதுதான் இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் என்றும் வாதிடப்பட்டது.
இந்நிலையில், அதை பதிவு செய்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.