தினம் ஒரு திருப்பாவை
- மார்கழி மாதம் படிக்க வேண்டிய பதிகம் கோதை ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
- திருப்பாவை பாடல் மற்றும் அவற்றின் பொருளை அறிந்து பாடுவோம்
திருப்பாவை
பாடல் :- 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வ நுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்த்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம் :
கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! நீ ஒன்றையும் மறைத்து வைக்காதே!கடலுக்குள் செல்! கடல் நீரை முகந்து கொள்; பேரொலியுடன் மேலே எழு; ஊழிக் காலத்திலும் கேடில்லாத திருமாலின் திருமேனி போல் உருவத்தே கருமை கொள்! பெருமையும் எழிலும் பொருந்திய பதுமநாபனின் கையில் விளங்கும் சக்கரத்தினைப் போல மின்னிட்டு விளங்கு! அவனது மற்றொரு கையில் விளங்கும் வலம்புரிச் சங்கு போல நின்று முழங்கு! அப்பெருமான் சார்ங்கம் என்னும் வல்லிலிருந்து எய்யும் அம்புமழை போல் உலகம் வாழவும்,நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் பொழி! என்று ஆண்டாள் அழகுற பாடுகிறார்.