தினம் ஒரு திருவெம்பாவை
- மார்கழி மாதத்தில் படிக்க வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
- திருவெம்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம்.
திருவெம்பாவை
பாடல் : 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்றில்லைச்சிற்றம் பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்பவார்கலைகள்
ஆர்ப்பாவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
புத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்.
– மாணிக்கவாசகர்-
பாடல் விளக்கம் :
நன்மை செய்யும் தில்லைச் சிற்றம்பலத்திலே,ஒரு திருக்கரத்தில் தீயை ஏந்தி ஆடுகின்றான் கூத்துப் பெருமான்,நம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் கெடும்படி நாம் மகிழ்ச்சியுடன் துள்ளி ஆடுதற்குரிய தீர்த்த வடிவமாக அவன் விளங்குகின்றான்.அவன் இந்நிலவுலகத்தையும், வானத்தையும்,நம் எல்லோரையும் படைத்தும் காத்தும்,அழித்தும் விளையாடுகின்றவன்.அந்த பெருமானுடைய பொருள்சேர் புகழைப் பேசிக்கொண்டு,கை வளையல்கள் ஒலிக்கவும், இடையில் அணிந்துள்ள மேகலைகளின் ஒலி துள்ளவும் மலர்கள் சூடிய கூந்தலின் மேல் வண்டுகள் ஒலிக்கவும்,தாமரை பூத்த பொய்கை நீரைக் குடைந்து,நம்மை உரிமையாகவுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய சுனை நீரிலும் நாம் ஆடுவோமாக என்று அருளுகிறார் மாணிக்கவாசகர்.