"சசிகலா குடும்பத்துக்கு அதிமுகவில் இடமில்லை" அமைச்சர் திட்டவட்டம்..!!
சசிகலா குடும்பத்தை மீண்டும் கழகத்தில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.
வடசென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆளுநர் என்பவர் மாநிலத்தின் நிர்வாக தலைவர். அந்த அடிப்படையில் முதலமைச்சர் அவ்வப்போது மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள், சூழ்நிலைகள் குறித்து தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் தெரிவித்து வந்துள்ளார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. டிடிவி தினகரனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார் என்ற செய்திக்கு துணை முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கமே போதுமானது.
சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் யாருடைய தலையீடும் இல்லாமல் இயக்கத்தையும் அரசையும் வழிநடத்த வேண்டும் என்பது தான் அனைவரின் உணர்வும். அந்த உணர்வு தான் நேற்றும் இன்றும் நாளையும் இருக்கும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. சசிகலாவையோ, தினகரனையோ மீண்டும் கழகத்தில் சேர்த்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை. இதுதான் கழக தொண்டனின் எதிர்பார்ப்பு.மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம். தற்போது இருக்கும் நிலையில் அம்மாவின் லட்சியங்கள் மற்றும் கனவுகளை அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதனை மக்கள் உணர்ந்து இடைத்தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள். யார் எந்த யுக்தி, சூழ்ச்சி, வஞ்சகம் இதை எல்லாம் பயன்படுத்தினாலும் கூட எங்களுக்கு அம்மாவின் நல்லாசி உள்ளது. எனவே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வரலாற்றில் இடம் பெறுவோம்.
டி.டி.வி தினகரன் பக்கம் பெரிய அளவில் யாரும் கிடையாது. கிட்டதட்ட 2 சதவீதம் பேர் அங்கு உள்ளனர். இதில்கூட இங்கு பதவி கிடைக்காதவர்கள் தான் அங்கு சென்றுள்ளனர். இங்கு எல்லோருக்கும் பதவி தர முடியாது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற அடிப்படையில் கழகத்தில் உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வரும். இங்கிருந்து சென்றவர்களால் கட்சி எந்தவிதத்திலும் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படாது.
DINASUVADU