கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை..!
அண்டார்டிகாவில், இந்தியாவில் உள்ள டெல்லி நகரத்தை போன்று 3 மடங்கு அதிகமுள்ள பனிப்பாறை கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு ஒருவித அச்சம் தோன்றியுள்ளது.
உலகில் உள்ள பனிப்பாறைகள் பூமி வெப்பமாவதை தடுக்கிறது. அதன்படி பூமியின் தெற்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் அதிமான அளவில் சூழ்ந்துள்ளது. பனிப்பாறைகள் உருகினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பல நகரங்கள், நிலப்பகுதிகள் கடலினுள் மூழ்கும் அபாயம் உள்ளது.
தற்போது, நடைபெறும் காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்து அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை ஒன்று உருகி கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதற்கு முன் கடந்த வருடத்திலும் ஏ-68 என்ற பனிப்பாறை ஒன்று கடலில் உருகி சிறு சிறு துண்டுகளாக கரைந்தது. தற்போது மீண்டும் அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை கடலில் மிதப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பனிப்பாறைக்கு விஞ்ஞானிகள் ஏ-76 என்று பெயரிட்டுள்ளனர். மேலும், 4320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள இந்த பனிப்பாறை, கிட்டத்தட்ட டெல்லி நகரத்தை போன்று 3மடங்கு அதிகம் என்று கணித்துள்ளனர். மேலும், 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் உள்ள இந்த பனிப்பாறை வெடல் கடலில் தற்போது மிதக்கிறது. இதனால் கடல்நீர் உயரும் அச்சத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் உள்ளனர்.