‘உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது’ – எச்சரிக்கை விடுக்கும் WHO…!
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ் ஆனது தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின், டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அவர்கள், டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வகை வைரஸ் உலகில் 98 நாடுகளில் பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வகை வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ள இரண்டு வழிகளை கூறியுள்ளார். அதன்படி,
- பொது சுகாதாரம், ஆரம்ப தொற்று பாதிப்பை கண்டறிதல், மருத்துவ பராமரிப்பு போன்றவை முக்கியமானவை. முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டமான இடங்களுக்கு செல்லாதிருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
- ஆக்சிஜன், சோதனை கருவிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை உலக நாடுகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு இந்த நேரத்தில், ஒவ்வொரு நாட்டிலும் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
என தெரிவித்துள்ளார்.