அமெரிக்காவை அதிரவைத்த “தமிழ் மொழி”….!!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர் நடப்பு ஜனவரி மாதத்தை “தமிழ் கலாச்சார மாதம்” ஆக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக வடக்கு கரோலினா மாநிலம் உள்ளது. இங்குள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் சங்கத்தினர் நடப்பு ஜனவரி மாதத்தை “தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு” மாதமாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஆளுநர் ராய் கூப்பர் ஏற்று அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ் மொழி” அனைத்து மொழிகளுக்கெல்லாம் அடையாளமாக விளங்குகிறது என்றும், உலகில் பேசப்பட்டு வரும் மொழிகளுக்கெல்லாம் முதன்மையான அடையாளமாக விளங்குகிறது என்றும் புகழ்ந்துள்ளார் .மேலும் இம்மொழி உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. தமிழ் மொழியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நாட்டின் சமூக, பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறியுள்ள கூப்பர், ஜனவரி மாதத்தில் தமிழ் சமூக மக்கள் 4 நாட்கள் கொண்டாடுகிற அறுவடை திருநாளான “பொங்கல் பண்டிகை” பற்றியும் புகழ்ந்து வீடியோவில் பேசியுள்ளார்.
இந்நிலையில் இங்குள்ள தமிழர்கள், தமிழ் மொழியின் கலாச்சாரத்தை எப்போதும் பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல், வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிந்துள்ளனர் என்று அவர் தமிழ் மக்களையும் பெருமையாக பேசியுள்ளார். ஆகவே 2019 ஜனவரி மாதத்தை அனைத்து மக்களுக்கும் ” தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்” ஆக அனுசரிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.