7 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தையை கூகுள் எர்த்தில் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன்!
ஜப்பானை சேர்ந்த ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் புகைப்படத்தை கூகிள் எர்த்தில் பார்த்து, அதிர்ச்சியும், ஆச்சிரியமும் அடைந்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த ட்விட்டர் பயனாளர் ஒருவர் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் அவர் வீட்டில் இருக்கும் போது, கூகிள் எர்த் என்ற மேப் செயலி மூலம் தனது பெற்றோரின் வீட்டைத் தேட முடிவு செய்துள்ளார். அப்போது, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த என் தந்தையை நான் பார்த்தேன் என்று அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சாலையின் ஓரத்தில் தனது அம்மா வருகைக்காக, தந்தை காத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
எனது தந்தை அமைதியான, கனிவான மனிதர், கூகிள் எர்த் இந்த இடத்திற்கான புகைப்படத்தை புதுப்பிக்காது என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி, 6.9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. இதை பார்த்து பலரும் கூகிள் எர்த் மேப்பில் தங்களுக்கு சிறந்த இடங்களை தேடி வருகின்றனர். இதுபோன்று, வயல்களில் பணிபுரிந்து கடந்த ஆண்டு இறந்த பாட்டியின் படத்தைக் கண்டுபிடித்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் இறந்த தனது நாயின் படத்தைக் கண்டுபிடித்தாக கூறியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு பெரு லிமா நகரில் உள்ள ஒரு பிரபலமான பாலத்தை கடக்க சரியான வழியை அடைய ஒரு நபர் கூகிள் மேப்ஸைப் பயன்படும்போது தனது மனைவியை வேறொரு ஆணுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில், பெஞ்சின் மீது கருப்பு மற்றும் வெள்ளை ஆடை அணிந்த ஒரு பெண்ணும், நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த ஒரு ஆணின் புகைப்படம் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.