இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தயாராகும் இரண்டாவது அலகு…!
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 2-வது அலகு இன்று முதல் செயல்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீப நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வந்தனர்.
இதனால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கபட்டது. இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் முதல் அலகில் கடந்த 13-ம் தேதி முதல், 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2-வது அலகு இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்திகாக செயல்படவுள்ளது. இன்னும் மூன்று நாட்களில், இந்த அலகில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்த 2-வது அலகும் செயல்பட துவங்கினால், கூடுதலாக 35 டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.